ஜம்முகாஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
காஷ்மீரை 3 ஆக பிரித்து, ஜம்மு மாநிலம், காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள அரசியல் சாசன சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை ரத்து செய்ய முடிவு எடுத்து உள்ளதாகவும், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையின்போது வெளியிடக்கூடும் எனவும் தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயன்றால் பெரும் போராட்டம் வெடிக்கும் என, காஷ்மீர் அரசியல் தலைவர்கள் எச்ச ரித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிறன்று நள்ளிரவில் ஜம்முவின் துணை ஆணையாளர் சுஷ்மா சவுகான் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அளிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளார். மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் 4க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும். அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பத்திரிகையாளர்கள் வெளியேறுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் இணைய சேவைகளும் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அங்கு பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் படைகள் குவிக்கப்பட்ட சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் உஸ்மன் மஜித் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. எம்.ஒய். தாரிகாமி ஆகியோர் தங்களை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.